திருச்சி-கரூர் சாலை பகுதியில் முருங்கைப்பேட்டையில் டூவீலரில் 2 பேர் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் எஸ்ஐ கண்ணதாசன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, முருங்கைப்பேட்டை மேலத்தெருவில் 2 வாலிபர்கள் டூவீலர்களில் அரிசி மூட்டைகளுடன் வந்தனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேந்தர்பாபு ( 30), திருவானைக்காவலை சேர்ந்த மணிகண்டன் (26) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதனை அவர்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி மாட்டுத்தீவனத்துக்கு விற்பனை செய்வதாக தெரியவந்தது. இந்நிலையில் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 2 டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.