தமிழகத்தில் இப்போது தக்காளி விலை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் விவசாயிகள் விலை கட்டுப்படியாகவில்லை என அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
திருச்சி நகரின் மையப்பகுதியில் செயல்படும் காந்தி மார்க்கெட் மூலம் திருச்சி, தஞ்சை, புதுகை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கனிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ தக்காளி சில்லரை விலை 8 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.100 முதல் 200 வரை விற்பனையாகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி வருகிறது. இந்த ஆண்டு உற்பத்தி அதிகரித்ததால் தக்காளி வரத்தும் மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே விலை குறைந்து உள்ளது என்று காந்தி மார்க்கெட் வியாபாரி கமலக்கண்ணன் தெரிவித்தார்.
செனனை கோயம்பேடு மார்க்கெட்டிலும் தக்காளி விலை கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 15 கிலோ கொண்ட பெட்டி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணகிரியை சேர்ந்த தக்காளி விவசாயி, சென்னப்பா கூறும்போது, இந்த ஆண்டு தக்காளி உற்பத்தி அதிகரித்து உள்ளது. இன்னும் ஒருவாரம் இந்த நிலை தான் நீடிக்கும். இதனால் தக்காளியை பறித்து மார்க்கெட்டுக்கு அனுப்பும் கூலிக்கு கூட பணம் கிடைக்கவில்லை. இதை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடலாமா என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் என்று வேதனையுடன் கூறினார்.