தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுகிறது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, தலைமையில் 3 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன. இது தவிர நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. சுயேச்சைகளும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.
வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி விட்டாலும் இன்று தான் திமுக, அதிமுக, பாஜக, கட்சியினர் ஆங்காங்கே வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி கடைசி நாள்.
திருச்சி தொகுதிக்கான தேர்தல் அதிகாரி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார். எனவே கலெக்டர் அலுவலகத்தில் தான் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். இதையொட்டி காலையிலேயே கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. உள்ளே செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டது.
திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக திருச்சியில் போட்டியிடுகிறது. மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். , நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் .
இவர்கள் 4 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். 11 மணி அளவில் நாம் தமிழர் ராஜேஷ் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இதுபோல அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி வரை தேர்தல் அலுவலகத்துக்குள் வருகிறவர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.