திருச்சி, திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் கை கால் செயலின்றி கிடந்த ஆந்திர மாநில பெண்ணை மீட்டு திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கங்காரு கருணை இல்லத்தில் ஒப்படைப்பு திருவெறும்பூர் பிப் 3 திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவெறும்பூர் மாநகரம் இங்குள்ள பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வந்து செல்வர் இங்கிருந்து கிழக்கே தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை பட்டுக்கோட்டை வேளாங்கண்ணி நாகப்பட்டினம் காரைக்கால் வரை பயணிக்க முடியும் அதேபோல் திருச்சி கோயம்புத்தூர் சேலம் நாமக்கல் திருச்செங்கோடு சென்னை மதுரை புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும் அதனால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து பஸ் ஏறிச் செல்வர்.
பரபரப்பாக இயங்கி வரும் இந்த பஸ் ஸ்டாண்டில் திருச்சி மாநகராட்சியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட இருக்கைகள் ஆங்காங்கே உடைந்து சிதைந்து கிடக்கும் அது மட்டுமன்றி பேன்சி கடை கருவாட்டு கடை என பஸ் ஸ்டாண்ட் உள்ளே பயணிகள் அமர்ந்திருக்கும் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் காவல்துறையினர் அவ்வப்பொழுது நடவடிக்கை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் இத்தகைய கடைகள் அவ்வப்பொழுது வந்து பரப்பி விடுவார்கள். இதனால் பயணிகள் முகம் சுளித்தபடி பஸ் வருகைக்காக காத்திருப்பர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பயணிகளின் இருக்கை பகுதியில் ஒரு பெண்மணி கை கால் செயல் இழந்த நிலையில் அங்கேயே படுத்து கிடந்தார். அவருக்கு சிலர் பரிதாபப்பட்டு உணவும் வழங்கி வந்துள்ளனர். பெண்மணியால் எழுந்து அருகில் உள்ள பாத்ரூம் செல்ல முடியாததால் அங்கேயே அணைத்து செயல்களையும் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் இருக்கை பகுதி மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறவே பயணிகள் இருக்கையில் அமராமல் சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதனை நேற்று பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர் மனித நேயம் அன்பழகன் தனது முகநூல் ரீலில் செய்தியாக பதிவிட்டு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டினார். திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் கவனத்திற்கும் கொண்டு சென்றார். இது சோசியல் மீடியாவில் வைரலானது. செய்தி அறிந்த டி எஸ் பி அப்பெண்மணியை உடனடியாக மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைக்க திருவெறும்பூர் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை அடுத்து காவலர்கள் ஜான்சன்,பிரபு ஆகியோர் திருச்சி மாநகராட்சி அலுவலர் சிவக்குமார் உதவியுடன் பஸ் ஸ்டாண்ட் சென்று சில பெண்களின் உதவியுடன் அப்பெண்மணியை மீட்டு சுத்தப்படுத்தி புதிய ஆடையை அணிவிக்க செய்து திருச்சி கிராப்பட்டி பகுதியில் உள்ள கங்காரு கருணை இல்லத்தில் முறைப்படி ஒப்படைத்து பராமரிக்க சேர்த்து விட்டனர். இது குறித்து போலீஸ் விசாரணையில் மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் ராஜேஸ்வரி வயது (50) கணவர் பெயர் நாகராஜன் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ஒரு கையும் காலும் செயல் இழந்த நிலையில் அவரது மகன் தான் கொண்டு வந்து விட்டு சென்றதாக மாற்று மொழியில் அப்பெண்மணி கூறியதாக கூறினர். காவல்துறையினரின் உடனடி கருணை நடவடிக்கையால் திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். உடனடி நடவடிக்கை எடுத்த டிஎஸ்பிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.