திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதி மெயின்கார்டு கேட். இங்குள்ள என்எஸ்பி ரோடு, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம் பகுதி, கோட்டை நுழைவாயில் முகப்பு, பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான தரைக்கடைகள் காலம் காலமாக நடந்து வருகிறது.
இந்த கடைகள் அனைத்தும் வீதிகளின் இருபுறங்களையும் ஆக்ரமித்து போடப்பட்டுள்ளன. இந்த கடைகள் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்தபோதிலும், அந்த சாலைகளில் நடந்து செல்லும் மக்கள் , மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கண்ட வீதிகளில் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கூட்டத்துடன் கடைவீதிகளுக்கு வரும் மக்கள் கூட்டமும் சேர்வதால் வீதிகள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கைக்குழந்தைகளுடன் இந்த வீதிகளில் பெண்கள் செல்ல முடிவதில்லை. அதுவும் திருவிழா மற்றும் முக்கிய நாட்கள் வந்து விட்டால் மக்கள் முண்டியடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.
இப்படியே தரைக்கடைகளை இந்த பகுதியில் அனுமதித்தால் நாளுக்கு நாள் கடைகள் அதிகரித்து எதிர்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்படும். எனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டும் எதிர்கால போக்குவரத்து அவசியத்தை கருதியும் உடனடியாக இந்த பகுதிகளில் உள்ள தரைக்கடைகளை அகற்றி அந்த கடைகள் அனைத்தையும் டவுன்ஹால் பகுதியில் அமைத்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். மெயின்கார்டு பகுதியில் உள்ள பெரிய பெரிய கடைகளுக்கு செல்லும் மக்களும் சிரமமின்றி செல்வார்கள். தரைக்கடைகளில் பர்சேஸ் செய்பவர்கள் டவுன் ஹால் பகுதிக்கு வந்து செல்லவும் வசதியாக இருக்கும்.
மாநகராட்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு