திருச்சி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயராம் நகர், காவேரி நகர் பகுதியில்
300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை முற்றிலுமாக பெயர்ந்து விட்டது. தற்போது தொடர் மழை பெய்ததன் காரணமாக சாலை சேறும்,
சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். முதியோர்கள்,
குழந்தைகளுக்கு இதனால் நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். பலமுறை புகார் அளித்தும் சாலையை சீரமைக்காததை கண்டித்து, சாலையை சீரமைத்து தர கோரி அப்பகுதி பொதுமக்கள் குளம் போல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ள சாலையில் பெண்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்…
தற்போது சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினர். இன்னும் ஒரு வார காலத்தில் புதிய தார்ச் சாலை அமைக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆவேசத்துடன் தெரிவித்தனர்.