திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்’ இன்று நடைபெற்றது. திருச்சி கல்வி மாவட்ட மருங்காபுரிப் பகுதியைச் சார்ந்த 9 அரசுப் பள்ளியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் பு.சு. விஜயலட்சுமி விழாவுக்குத் தலைமை தாங்கித் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் நான் முதல்வன் திட்டப் பொறுப்பாளரும் விலங்கியல் துறைத் தலைவருமான முனைவர் உமாமகேசுவரி அறிமுக உரையாற்றினார், குமுளூர் ஆசிரியர் பயிற்சி
நிறுவன முதல்வர் முனைவர் வின்சன்ட், முதன்மைக் கல்வி அலுவலகத்தைச் சார்ந்த முனைவர் எ.எம் கான் ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வுச் செய்தியை வழங்கினர். கல்லூரியில் உள்ள அனைத்துத் துறைகளையும் சார்ந்த துறைத்தலைவர்கள் அந்தந்தத் துறை சார்ந்த கருத்துக்களையும் அதன் பயன்களையும் எடுத்துரைத்தனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் கல்பனா, முனைவர் பாலமுருகன் ஆகியோர் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்லூரியில் உள்ள அனைத்துத் துறை வகுப்பறை, ஆய்வுக்கூடத்திற்கு அழைத்துச் சென்று மாணவர்களின் ஐயங்களை நீக்கி ஆற்றுப்படுத்தினர் முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாலமுருகன் வரவேற்று நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.