நன்றி: அரசியல் அடையாளம் வார இதழ்…
பொங்கலையொட்டி காபி கடைக்கு வந்திருந்த அனைவருக்கும் சுப்புனி பொங்கல் கொடுத்து உபசரித்தார். தித்திக்கும் பொங்கலை ருசி பார்த்த கையோடு, பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் மூவரும் உரையாடலை துவங்கினர்.
சேலம் திமுக இளைஞரணி மாநாடு முடிந்ததும், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது என்று கூறி இருந்தீர். இப்போது அதை முதல்வர் ஸ்டாலின் மறுத்துள்ளாரே என காஜா பாயை பார்த்து சகாயம் கேட்க, இப்போதும் சொல்கிறேன். உதயநிதியை துணை முதல்வராக்கும் முடிவு ஒத்திப்போயிருக்கிறதே தவிர, கைவிடப்படவில்லை என்ற காஜா பாய்.. இதுபற்றி விரிவாக சொல்கிறேன் கேளு என ஆரம்பித்தார்.. சேலத்தில் வரும் 21ம் தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாத இறுதியில் முதல்வர் வெளிநாடு செல்கிறார். எனவே அவர் வெளிநாடு செல்வதற்கு முன் உதயநிதியை துணை முதல்வராக்க முதல்வர் தரப்பு முடிவு செய்திருந்தது உண்மை தான். இது தொடர்பாக பரவலாக பேசப்பட தொடங்கிய நிலையில், உளவுத்துறை முதல்வரிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், உங்களுக்கு உடல் நலக்குறைவு என்பது போல் எதிர்க்கட்சியினர் தகவல்களை பரப்புகின்றனர். எனவே தான் உதயநிதியை துணை முதல்வராக முதல்வர் குடும்பத்தினர் விரும்புவதாகவும் அவர்கள் சமூக வலைதளங்களில் செய்தியாக்குகின்றனர்.. இதே நிலை தொடர்ந்தால் லோக்சபா தேர்தலின் போது சங்கடம் ஏற்படலாம் இது கட்சிக்கும், ஆட்சிக்கும் இருக்கும் ஸ்திரத்தன்மையை குறைத்து விடும். எனவே இப்போதைக்கு இந்த முடிவு வேண்டாம் என அந்த அறிக்கை சொல்லி இருக்கிறதாம். இதனால் தான் முதல்வர் உதயநிதியை துணை முதல்வராக்கும் முடிவு மாறியிருக்கிறதாம். இந்த விஷயத்தில் முதல்வர் வீட்டு கிச்சன் காபினெட் இந்த விஷயத்தில் கடும் அதிருப்தியில் உள்ளதாகவே தகவல் நமக்கு கிடைத்திருக்கிறது. இதனால் முதல்வர் வெளிநாடு சென்று வந்த பிறகு, அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் உதயநிதி துணை முதல்வர் ஆவார், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவார் என்று முதல்வர் வீட்டு கிச்சன் காபினெட் வட்டாரத்தில் உறுதியாக பேசப்படுகிறது என காஜா பாய் சொல்லி முடித்தார்.
அடுத்ததாக, திருச்சி அதிமுக மேட்டர் பற்றி ஆரம்பித்தார் சகாயம். கடந்த 12ம் தேதி மாலை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் 15க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதான பட்டியல் வெளியானது. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் வந்த பிறகான முதல் லிஸ்ட் இது. மாணவரணி, ஜெ. பேரவைக்கு நிர்வாகிகள் மற்றும் புதிய பகுதி செயலாளர்கள் என சுமார் 15 புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், யாரையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக தகுதி இல்லாதவர்கள், தனது உறவினர்களை நிர்வாகிகளை நியமித்துள்ளார் என ஒரு கூட்டமே கிளம்பி எடப்பாடியை பார்த்து புகார் கூறிவிட்டு வந்திருக்கிறது. குறிப்பாக சீனிவாசன் கட்சி சீனியர்களை ஒதுக்கி விட்டார் என்று புகார் வாசிக்கின்றனர். இப்ராகிம்ஷா என்பவர் தனக்கு மாநகர் மாவட்ட பொருளாளர் பதவி தருவதாக கூறி விட்டு, மாணவரணியில் பதவி வழங்கி உள்ளனர் என்று புலம்புகிறாராம்.
இதனால் இப்ராகிம் ஷா, வெல்லமண்டி சண்முகம், முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 3 குரூப் சேலம் சென்று பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளனர். அதேபோல் மாவட்ட செயலாளர் சீனிவாசனும், புதிய நிர்வாகிகளை அழைத்துச்சென்று எடப்பாடியை சந்தித்துள்ளார். இதனால் இந்த விவகாரத்தில் கட்சி தலைமைக்கு தலைவலி ஏற்பட்டு இருக்கிறது பாவம் எடப்பாடி என சொல்லி முடித்தார் சகாயம்.
பின்னர் திருச்சி மாநகர போலீஸ் பற்றிய ஒரு செய்தியை பார்த்தா கூறினார். திருச்சி மாநகர ஐஎஸ் இன்ஸ்பெக்டராக சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.. திருச்சியின் சீனியர் அமைச்சருக்கு வேண்டியர் என்பதோடு ஏடிஜிபி ஒருவருக்கும் ரொம்ப வேண்டியவர் என்கின்றனர் சிட்டி போலீசார்.. எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் என 10 ஆண்டுகளாக திருச்சி சிட்டியை யே சுற்றி வரும் அந்த இன்ஸ்பெக்டர் தயாளமான சாரி தாராளமா ஓரு வாரத்தில் ஐஎஸ் இன்ஸ்பெக்டர் என்கின்ற காக்கி வட்டாரத்தில் புலம்பல் ஆரம்பித்துள்ளது என்று பார்த்தா சொல்லி முடிக்க காபி கடை பெஞ்ச் காலியானது.