திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(39) . ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கோகுல்நாத்(14) என்ற மகனும், சாய் நந்தினி(11) என்ற மகளும் உள்ளனர். மண்ணச்சநல்லூர் அரசு பள்ளியில் மகன் 9ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கீர்த்திகா பல சுய உதவி குழுகளில் கடன் வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவனும் குடி பழக்கத்தினால் அக்கம், பக்கம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. கடன்காரர்கள் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்து உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ரைஸ்மில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். இன்று அதிகாலை
3 மணி அளவில் வீட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி வந்து பார்த்தார். அப்போது மனைவி, மகன் ,மகள் ஆகிய மூன்று பேரும் துப்பட்டாவில் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அவர் கதறி் துடித்தார்.
உடனடியாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கடன் தொல்லை காரணமாக கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கிருத்திகா தனது குழந்தைகள் இருவரையும் கொன்றுவிட்டு தானும் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனினும், தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
தூக்கில் போடுவதற்கு முன் குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் குழந்தைகள் தூங்கியதும் தூக்கில் தொங்கவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மண்ணச்சநல்லூரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
.