திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி ரோடு சாலையில் புதிய பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீரங்கத்திற்கு புதிய பேருந்து நிலையம் வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகளை
அமைச்சர் கே.என் நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் , எம்எல்ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டும் போது அமைச்சர் கே.என் நேருவிடம் நிகழ்ச்சிக்கு பூஜை செய்ய வந்திருந்த புரோகிதர் அண்ணா நீங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் நீங்கள் தான் வருங்கால முதலமைச்சர் என்றார். இதைக்கேட்ட அமைச்சர் நேரு அடுத்த வினாடியே…… நீ என்னை வீட்டிற்கு அனுப்பி விடுவாய் போல என சத்தமாக கூறினார். இதைக்கேட்டு அங்கு வந்திருந்த அதிகாரிகள் , கட்சியினர் அனைவரும் சிரித்தனர். புரோகிதர் சொன்னதற்கு, அமைச்சர் நேரு உடனடியாக கவுன்டர் கொடுத்ததால், விழா சிரிப்பாய் சிரித்தது.