திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் புது தெரு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானவர்கள் இன்று திருச்சி கேகே நகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் தெருவில் வசிக்கும் தாய், மகள் இருவரும் சேர்ந்து எங்களுடைய தெருவாசிகளிடம் தனியார் குழுக்களில் கடன் வாங்கி கொடுத்து வந்தனர்.இந்த நிலையில் தாய், மகள் இருவரும் எங்கள் தெருவை சேர்ந்த சுமார் 30 பேரிடம் ஒருவருக்கொருவர் தெரியாமல் தன்னுடைய மகள் திருமணமத்திற்கு பணம் தேவைப்படுகிறது. மகளிர் குமு மூலம் கடன் வாங்கி கொடுங்கள். வட்டியுடன் பணத்தை தருகிறேன் என்று கூறி 30 பேர் மூலம், வங்கியில் பல லட்சம் கடன் பெற்று அந்த பணத்தை தாய் மகள் இருவரும் மோசடி செய்துவிட்டனர். பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
கடனை திருப்பி கட்டும்படி வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்களிடம் கேட்டபோது தாய்,மகள் பணம் தராமல் ஏமாற்றி வந்தனர்.இது தொடர்பாக தாய் மகள் இருவரையும் சந்திக்க சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். எனவே அவர்களை கண்டுபிடித்து பணத்தை திரும்ப வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.