திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு புத்தாநத்தம் உதவி ஆய்வாளார் .லியோனி ரஞ்சித்குமார் தலைமையில், போலீஸ்காரர்கள் புத்தாநத்தம் வீரபாண்டி, வையம்பட்டி சாகுல் அமீது, மணப்பாறை மணிகண்டன், ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.
இந்த தனிப்படையினர் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த 1) புதுக்கோட்டை சதாசிவம் (28), ராமசாமி(25), நாகராஜ்(33) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணை முடிவில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க அவர்களிடம் ரூ.1 லட்சம் பணம் கேட்டு உள்ளனர். அந்த பணத்தை வளநாடு
கைகாட்டி ஏரிக்கரைக்கு அருகில் சதாசிவத்தின் உறவினர் விஜயகுமார் மூலம் பெற்றுக்கொண்டனர்.
இது குறித்து எஸ்.பி. வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் இது குறித்து விசாரணைநடத்தும்படி கூடுதல் எஸ்.பிக்கு உத்தரவிட்டார். அவரும் இதுபற்றி விசாரணை நடத்தி, ரூ.1 லட்சம் மிரட்டி பறித்த சம்பவத்தை உறுதி செய்து எஸ்.பிக்கு அறிக்கை அனுப்பினார்.அதைத்தொடர்ந்து தனிப்படை எஸ்ஐ. லியோனி ரஞ்சித்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் வீரபாண்டி, சாகுல் அமீது, மணிகண்டன்,ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. வருண்குமார் அதிரடி உத்தரவிட்டார். இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.
போலீஸ்காரர்கள் தவறு செய்தாலும் உடனடியாக துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்ட திருச்சி எஸ்.பியை மணப்பாறை, வையம்பட்டி வட்டார பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர். இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள் இருந்தால் தான் காவல்துறை பெயரை கெடுக்கும் கருப்பு ஆடுகளை களையெடுக்க முடியும் என பொதுமக்கள் எஸ்.பி.யை பாராட்டி வருகிறார்கள்.