தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்ட உத்தரவு.. தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், தமிழ்நாடு கைரேகை பணியகம், தமிழ்நாடு ஊர்க்காவல் படை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனும், சிறப்பாகவும், துணிச்சலாகவும் பணியாற்றிய அதிகாரிகளுக்கு அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உட்பட 107 பேருக்கு இந்தாண்டுக்கான அண்ணா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதக்கங்களை பெறுவோருக்கு வெண்கலப் பதக்கமும், ரொக்கப் பணம் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட எஸ்.பியாக பணியாற்றி வரும் வருண்குமார் ஐபிஎஸ், புகார்கள் மற்றும் பிரச்னைகளுக்கு துணிச்சலாகவும், தைரியமாகவும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் பெயர் பெற்றவர். கடந்த ஆண்டு முக்கொம்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 காவலர்களை போக்சோ வழக்கில் கைது செய்தது உள்ளிட்ட பல துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சங்கரை கைது செய்தது, முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்தது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரவுடி கொம்பன் ஜெகனை என்கவுன்ட்டர் செய்தது உள்ளிட்ட பல துணிச்சலான நடவடிக்கைளை எஸ்.பி வருண்குமார் எடுத்துள்ளார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எதிராக அவதூறு கருத்துகளை பரப்பிய போதும், தரக்குறைவாக விமர்சனங்களை செய்து வரும் நிலையிலும் அவற்றை திறம்பட எதிர்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.