முன்னாள் முதல்வர் கலைஞரை விமர்சனம் செய்ததாக சமீபத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அந்த சமயத்தில் சாட்டைதுரைமுருகனும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் கட்சியின் நிர்வாகி காளியம்மாளை சீமான் பிசிறு என விமர்சனம் செய்துபேசிய விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதனைத்தொடர்ந்து சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பேசிய சீமான் திருச்சி எஸ்பி வருண்குமாரை கடுயைாக விமர்சனம் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வருண்குமார் ஐபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இது போன்ற விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் வழக்கு தொடரப்படும் என கூறினார். இந்த நிலையில் திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தாரை விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருவது போலீசார் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இதனிடையே திருச்சி எஸ்பி டாக்டர் வருண்குமார் நேற்று மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘இதை தூண்டி விட்ட நபர்களையும் நீதித்துறையின் முன் கொண்டு வந்து நிறுத்துவேன். வெளிநாடுகளில் இருந்து ஆபாசமாக பதிவு செய்யும் போலி ஐடிகளையும் விடப்போவதில்லை. சட்டத்தின் மேல், நீதித்துறையின் மேல், 100% எனது நம்பிக்கையை வைக்கிறேன். ஆபாசத்திற்கும் அவதூருக்கும் இறுதி முடிவுரை எழுதுவோம்.’ என பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில் தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் திருச்சி எஸ்பியையும் அவரது குடும்பத்தாரையும் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். எஸ்பியை விமர்சனம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்ட ஐடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு தொடர்புடைய நபர்கள் மீது அடுத்த சில நாட்களில் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்கின்றனர்…