திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா. இவரது வீடு கண்டோன்மெண்ட் எஸ்பிஐ காலனி பகுதியில் உள்ளது. இன்று காலை சிவாவின் வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரது வீட்டு முன் நிறுத்தி இருந்த கார், பைக் , கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து சிவா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிவா வீட்டின் முன் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அதில் பதிவான காட்சிககைளக்கொண்டு அவரது வீட்டில் தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். சிவா தற்போது மாநிலங்களவை கூட்டத்தில் பங்கேற்க டில்லி சென்று உள்ளார்.
திருச்சி சிவா வீட்டை ஒட்டி உள்ள பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நவீன இறகுபந்து அரங்கம் திறப்பு விழா நடந்தது. இதனை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். அந்த அரங்க திறப்பு விழா கல்வெட்டில் திருச்சி சிவா பெயர் இடம்பெறவில்லை. இதனால் இன்று காலை அவ்வழியாக வந்த அமைச்சர் நேருவின் காரை சிவாவின் ஆதரவாளர்கள் சிலர் மறித்தாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாகவே சிவா எம்பியின் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது..