திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சின் சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்(AXB613) மாலை 5:40 மணிக்கு கிளம்பியது. விமானம் மேலே சென்ற உடன் சக்கரங்கள் உள்ளே செல்ல வேண்டும். ஆனால், ஹைட்ராலிக் பெயலியர் காரணமாக, சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. உடனடியாக சுதாரித்த விமானி டேனியல் பெலிசோ, சார்ஜா செல்லாமல் திருச்சியிலேயே விமானத்தை, தரையிறக்க முயற்சி மேற்கொண்டார். எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் விமானத்தை தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் விமானத்தில் அப்போது தான் எரிபொருள் முழுவதாக நிரப்பப்பட்டதாக விமானி டேனியல் பெலிசோ விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறினார். இதனால் குறிப்பிட்ட அளவு எரிபொருள் தீர்த்த பிறகே விமானத்தை தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் எரிபொருள் தீர்வதற்காக, 5:40 மணி முதல் நடுவானிலேயே 4,255 அடி உயரத்தில், புதுக்கோட்டை- திருச்சி மாவட்ட எல்லைகளில் 26 விமானம் வட்டமடித்தது. அன்னவாசல் பகுதியில் மட்டும் 16 முறைக்கும் மேலாக சுற்றிய விமானம், பாக்குடி, மலம்பட்டி, ஆவூர், முக்கண்ணாமலைபட்டி உள்ளிட்ட பகுதிகளையும் வட்டமடித்தது. ஒரு விமானம் தொடர்ந்து சுற்றி வருவது குறித்து மீடியாக்களுக்கு சிலர் தகவல் தெரிவித்தாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து மீடியாக்கள் பிரேக்கிங் செய்தி வெளியிட ஆரம்பித்தன. கிட்டத்தட்ட அனைத்து மீடியாக்களிலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி-சார்ஜா விமானம் தொடர்ந்து வட்டமடித்து வருவதாக செய்தி வெளியிடப்பட்டது., இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பாதுகாப்பு கருதி, மருத்துவ குழுவினருடன் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. விமான நிலையத்தில் இருக்கும் 4 ஆம்புலன்சுகளும் அங்கு வந்தன. போலீசார் குவிக்கப்பட்டனர். விமான ஓடுபாதையில், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இது பயணிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் நிம்மதியை கொடுத்தது.
இது குறித்து விமானிகள் தரப்பில் கூறுகையில் .. இது போன்ற சம்பவங்கள் பல முறை நடக்கும். எமெர்ஜென்சி லேண்டிங் என்றால் குறிப்பிட்ட அளவு எரிபொருள் தான் இருக்க வேண்டும். திருச்சி-ஷார்ஜா விமானத்திற்கு அப்போது தான் எரிபொருள் நிரபப்பட்டதால் நீண்ட நேரம் சுற்றி எரிபொருளை தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பலமுறை இது போன்ற சம்பவங்கள் பல விமான நிலையங்களில் நடைபெற்றன. அடுத்த நாள் தான் வெளியில் தெரியும். ஆனால் இன்று செய்தி எதுவும் இல்லையோ என்னவோ தெரியவில்லை.. அனைத்து செய்தி சேனல்களும் பிரேக்கிங் செய்தி வெளியிட ஆரம்பித்து பீதியை ஏற்படுத்தி விட்டன என்கின்றனர்..