திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கண்ணுடையான்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 45). பழைய இரும்பு, பேப்பர், அட்டை போன்ற பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இவர் இன்று தனது ஆட்டோவில் திருச்சி சென்று அங்கு பழைய இரும்பு பேப்பர் அட்டை உள்ளிட்ட பொருட்களை வாங்கி தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கண்ணுடையான்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். கரையாம்பட்டி என்ற இடத்தில் வரும்போது ஆட்டோவின் பின்னால் புகை வருவதை கண்ட ரகுபதி ஆட்டோவை சாலை யோரம் நிறுத்திவிட்டு பார்த்தபோது ஆட்டோவில் பின்பக்கம் தீ பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அப்பகுதியில் இருந்த தண்ணீர் வண்டியை வரவழைத்து ஆட்டோவின் மீது தண்ணீர் ஊற்றி அணைத்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் ஆட்டோ முற்றிலும் எழுந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. சரக்கு ஆட்டோவின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஆட்டோவில் பழைய டயர் பேப்பர் அட்டை போன்ற பொருட்கள் இருந்ததால் தீ மல மல என வேகமாக பற்றியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.