மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி-யிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…. இவற்றில் கூறியதாவது…
திருச்சி மாவட்டம், வாத்தலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட துறையூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, முக்கொம்பு நடுக்கரை மற்றும் சிறுகாம்பூர் பெருவளை வாய்க்கால் வண்ணாந்துரை படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய பிரமுகர்கள் சிலரால் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ஜீயபுரம் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் மேற்பார்வையில் முக்கொம்பு நடுக்கரை பகுதி கொள்ளிடம் ஆற்றிலும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் உறுதுணையோடு சிறுகாம்பூர் பெருவளை வாய்க்காலில் வண்ணாந்துரை என்ற
இடத்திலும், நம்பர் ஒன் டோல்கேட் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரின் ஏற்பாட்டில் துடையூர் அருகே உள்ள என்ஜினியரிங் கல்லூரி எதிரே கொள்ளிடம் ஆற்றிலும் நள்ளிரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு முக்கிய பிரமுகர்கள் வாத்தலை போலீசாரின் உதவியுடன் அவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு இந்த சட்ட விரோத மணல் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மணல் அள்ளும் தொழில் சிறுகாம்பூர், நொச்சியம், நம்பர் ஒன் டோல்கேட் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஈடுபடத்தப்பட்டு வருகின்றனர். இதில் ஈடுபடும் தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளில் மூலம் நள்ளிரவு நேரங்களில் சாக்கு பையில் மணலை அள்ளி மூட்டைகளாக கடத்தி வந்து மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திலும், வீடுகளிலும் சேமிக்கின்றனர். தொடர்ந்து அங்கிருந்து மாட்டு வண்டி, மினி லாரி மூலம் வெளி ஊர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். தொடர்ந்து நடந்தேறிவரும் இந்த மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினர் வாத்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தால் அப்பாவி யாரையாவது பிடித்து வழக்கு பதிவு செய்து கணக்கு காண்பித்து விடுகின்றனர்.
நாங்களாக முன்வந்து மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் உரிய ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம் என்றால், மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை போலீசார் எங்களுக்கு எதிராக ஏவி விட்டு அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடும் சாபக்கேடான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இந்த சம்பவத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்காக போலீசாரே சில மாற்று தொடர்பு செல்போன் தொடர்பு எண்ணை பயன்படுத்தி அவர்களுக்கு ஒத்துழைப்பு தருவறு வருத்தமளிக்கிறது.
கடுமையான நடவடிக்கை எடுக்கும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருக்கும்போதே சறிதும் அச்சமின்றி போலீசார் இப்படி நடந்துகொள்வது மன வேதனையை அளிக்கிறது. எனவே இதுபோன்ற தொடர் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றோம் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.