திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகிறார்கள்.
இங்கு பல்வேறு விழாக்கள் நடந்தபோதும், சித்திரைத் தேரோட்டம் மிகவும் சிறப்பானது. ஒவ்வொரு ஆண்டும், சித்தரை முதல் செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டம் நடைபெறும். அதன்படி இன்று தேரோட்டம் நடக்கிறது.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் 6ம் தேதி காலை நடந்தது. இதையொட்டி கோவில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் மின்விளக்குகள் ஜொலிக்கிறது.
கொடியேற்றம் தொடங்கியது முதல் கோவிலுக்கு பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகரிக்கத் தொடங்கியது. பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். திருச்சி மாவட்டம் தவிர குறிப்பாக நாமக்கல், கரூர், தஞ்சை, பெரம்பலூர்,
புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். அதேபோல் தினமும் இரவு 8 மணிக்கு சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், மரக்குதிரை வாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி நேற்று இரவு முதல் பக்தர்கள் முளைப்பாரி, காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் அக்னி சட்டி ஏந்தி, அலகு குத்தி பாதயாத்திரையாக வந்து கொண்டே இருக்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக திருச்சி சத்திரம் பஸ் நிலையம் முதல் கோவில் வரை ஆங்காங்கே தண்ணீர் பந்தல், நீர்மோர், அன்னதானம் வழங்கி வருகிறார்கள்.
இன்று காலை 10.31 மணி அளவில் அறங்காவலா் குழுத் தலைவர் விஎஸ்பி இளங்கோவன் தலைமையில், இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில், அம்மன் சிறப்பு அலங்காரததில் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. ……. தாயே, சமயபுரத்தாளே…….. அம்மா…….. பராசக்தியே என்ற பக்திமுழக்கத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நம்பர் 1 டோல்கேட்டில் இருந்து கோவில் வரையிலும் மக்கள் வெள்ளமென திரண்டுள்ளனர். இதுபோல சமயபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களிலும் மக்கள் வெள்ளத்தை பார்க்க முடிந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சுமார் 2ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நாளை அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், 17ம் தேதி முத்துப்பல்லக்கிலும் புறப்பாடாகிறார். 18ம் தேதி மாலை அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு வசந்தமண்டபத்தில் தெப்ப உற்சவ தீபாராதனையும் நடைபெறுகிறது. தேரோட்டம் முடிந்து எட்டாம் நாளான 22ம் தேதி இரவு அம்மன் தங்கக்கமல வாகனத்தில் புறப்படுகிறார்.
சமயபுரம் தேரோட்டத்தையொட்டி இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமயபுரத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது.