சென்னையில் இருந்து கரந்தைக்குச் முறையான ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற தொழிலதிபரிடம் திருவெறும்பூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் ரூ2 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வது அதிகமான பொருட்களையும் பரிசு பொருட்களை எடுத்துச் செல்வது ஆகியவை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்துச் செல்லப்படலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் அது போன்ற பொருட்களை எடுத்துச்செல்லும் பொழுது முறையான ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அப்படி ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்யப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்காக தனியாக பறக்கும் படைகளை அமைத்து உள்ளது. அதன் அடிப்படையில் அவர்களும் ஆங்காங்கே வாகனத்தை தணிக்கை செய்து முறையாக ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் ஆகிவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதனை அடுத்து
இன்று காலை திருச்சி அரை வட்ட சாலையில் திருவெறும்பூர் அருகே கும்பக்குடி பகுதியில் வாகன தணிக்கையில் ஸ்பெஷல் தாசில்தார் ரபிக் முகமது தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது அந்த வழியாக வந்த இன்னோவா காரை மறித்து சோதனை செய்த பொழுது முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ2 லட்சம் பணம் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அவரிடம் விசாரித்த பொழுதுஅவர் சென்னை கோட்டூர்புரம் ரஞ்சித் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் முரளிதரன் (57) என்பதும் இவர் தஞ்சை மாவட்டம் கரந்தையில் நடைபெற்று வரும் கட்டட வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் அந்த பணத்தை கடந்த 21 ஆம் தேதி வங்கியில் இருந்து எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் பணம் எடுத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதால் முறையான ஆவணங்கள் கொடுத்து பணத்தை பெற்று செல்லுமாறு கூறி அவரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவெறும்பூர் உதவி தேர்தல் அலுவலர் சுதாவிடம் ஒப்படைத்தனர்.