திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஜெம்புநாதபுரம் கிராமத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறவை மாடுகளுடன் முசிறி – துறையூர் செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர். அப்போது தாங்கள் கொண்டு வந்த பாலை சாலையில் ஊற்றி ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ42- ம், எருமை பாலுக்கு ரூ51-ம் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் சங்கங்களில் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும், ஆவின் பால் கொள்முதலில் ஐ.எஸ்.ஐ பார்முலா தரத்தை அமுல்படுத்த வேண்டும், ஆவினுக்கு பால் வழங்கும் கறவை இனங்களுக்கு 50 சதவீதம் மானிய விலையில் கால்நடை அடர் தீவனம் வழங்க வேண்டும் என்பது.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது