திண்டுக்கல் மாவட்டம் இ. வி. ஆர் சாலை சிவாஜி கணேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மகன் 30 வயதான சண்முகப்பிரியன். இவருடைய மனைவி 25 வயதான மேனகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவி முகிலன் என ஆண் குழந்தை உள்ளது. முகிலன் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெறும் இவரின் உறவினரின் திருமணத்திற்கு செல்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கார் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக புறப்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சிறுகனூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி அருகே செல்லும்போது எதிர்பாராதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது .இந்த விபத்தில் கணவன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது ஆண் குழந்தை கவிமுகிலன்பரிதாபமாக உயிரிழந்து விட்டார். படுகாயம் அடைந்த குழந்தையின் பெற்றோர்கள் சண்முக பிரியன் மற்றும் மேனகா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.