திருச்சி மாவட்டம், முசிறி அருகே மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி சாந்தி (50). ஆறுமுகம் இறந்துவிட்ட நிலையில் சாந்தி தனியாக வசித்து வந்துள்ளார். சொந்த வேலை காரணமாக தா.பேட்டை கடை வீதி வந்துள்ளார். பின்னர் மகாதேவி கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் உடன் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டுக்கு மீண்டும் சென்றுள்ளார். அப்போது துறையூர்- நாமக்கல் சாலையில் ஊரக்கரை அருகே உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரே பால் வியாபாரம் செய்து வரும் தேவானூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மேலும் இந்த விபத்தில் சேகர் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி வழியே வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் உயிரிழந்த சாந்தியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சாலை விபத்தில் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
