திருச்சி காஜாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் உள்பட 4 பேர் திருச்சியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 2012ம் ஆண்டு ரூ.25 கோடி கடன் பெற்று சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். 2019ம் ஆண்டு அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் அவர்கள் வங்கியில் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்தவில்லையாம். இதனால் வங்கி நிர்வாகம் கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காஜாமலையில் உள்ள ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஜப்தி செய்ய மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார் தலைமையில் சென்றனர். வங்கி அதிகரிகளும் உடன் சென்றனர்.
அப்போது அங்கு திரண்டிருந்த 20 பேர் கும்பல், வங்கி அதிகாரிகளையும், மண்டல துணை தாசில்தாரையும் உருட்டு கட்டையால் தாக்கினர். இதில் அவர்கள் படுகாயமம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
மண்டல துணை தாசில்தாரை தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி கலெக்டர் ஆபீஸ், தாலுகா ஆபீஸ் ஆகிய இடங்களில் பணியாற்றும் சுமார் 750 அதிகாரிகள், ஊழியர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் பணிகளை புறக்கணித்து வெளியே வந்து கோரிக்கைகளை முழங்கியபடி இருந்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்ததால் பணிகள் முடங்கியது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் கேட்டபோது, அதிகாரிகளை தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். இதுவரை 3 பேரை கைது செய்துள்ளோம். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து தாக்கியவர்கள் எத்தனை பேராக இருந்தாலும் அவர்களையும் உடனே கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றார்.