தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்டோர் சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.
ஒருபுறம் வெயில் என்றால் மறுபுறம் அனல்காற்று நெருப்பாக வீசியது. இதனால் வெயிலில் இருந்து தப்பிக்க கோடை மழை எப்போது வரும் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் காத்து கிடந்தனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் குளு குளு சூழலால் மக்கள் மனம் குளிர்ந்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாத இறுதியிலேயே கோடை மழை தொடங்கியதுபோல் சுட்டெரிக்கும் வகையில் வெயிலும் அடித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டியே இருந்தது. இதேபோல் நேற்று காலை முதலே சுட்டெரிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் இருந்தது. பகலில் வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள், பாதைசாரிகள் வெயிலால் பெரிதும் அவதிப்பட்டனர்.
வெப்பத்தை தணிக்கும் வகையில் பழச்சாறு, மோர், இளநீர் உள்ளிட்ட குளிர்பானங்களை அருந்தினர். மேலும் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பெண்கள் குடை பிடித்தபடியும், துப்பட்டா அல்லது சேலை முந்தானையை தலையில் போர்த்தியபடியும் வீதிகளில் சென்றதை காணமுடிந்தது. பகலில் வீட்டில் மின்விசிறியை சுழல விட்டாலும் அனல் காற்றாகவே இருந்தது. சில வீடுகளில் பகலில் ஏ.சி. போடப்பட்டு வெயிலில் இருந்து தற்காத்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் திருச்சி மாநகரில் குளிர்ச்சியாக நிலவியது. ஒருபுறம் பெய்த மழையால் மகிழ்ச்சியாக இருந்தாலும், மற்றொருபுறம் சற்று பாதிப்படைந்து மக்கள் அவதியடையவும் செய்தனர்.
எதிர்பாராமல் பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்கள்
மழையில் நனைந்தபடியே சென்றதை காணமுடிந்தது. இந்த மழையானது திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பரவலாக பெய்துள்ளது. சில இடங்களில் சாரல் மழை தூறல்போல பெய்துள்ளது.
இன்று காலை 10.45 மணியளவில் திருச்சி கண்டோன்மென்ட், பாலக்கரை , சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், கருமண்டபம், மலைகோட்டை, கே.கே.நகர், பீமநகர் ஆகிய பகுதியில் 30 நிமிடம் கனமழை பெய்தது. 125 ஆண்டுகளுக்கு பிறகு வெப்பத்தின் அலை வீசியது. இந்தநிலையில் நேற்று மாலை புறநகர் பகுதியில் மழை பெய்தது. தற்போது இன்று மாநகர பகுதியில் ஒவ்வொரு பகுதியாக மழை பெய்து வருகிறது. இந்தமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.