திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தையொட்டி வாகன பராமரிப்பு ஸ்டாண்ட் செயல்படுகிறது. தென்னக ரயில்வேயிடம் இருந்து இதனை எஸ். வேலுசாமி என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்துகிறார். ரயிலில் வெளியூர் செல்பவர்கள் காா் , டூவீலரில் ரயில் நிலையம் வந்து இந்த வாகன பராமரிப்பு ஸ்டாண்ட்டில் வாகனங்களை விட்டு விட்டு ரயில் பயணம் மேற்கொள்கிறார்கள்.
திரும்பி வரும்போது தங்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு திரும்புகிறார்கள். இங்கு டூவீலர் பராமரிப்புக்கு ஒரு நாள் வாடகையாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதற்கு டிக்கெட் கொடுக்கிறார்கள். 3வது நாள் வந்து டூவீலரை எடுத்துக்கொள்வேன் என்பவரிடம் இன்று காலை ரூ.100 வசூலித்து உள்ளனர். 3 நாள் கணக்குப்படி பார்த்தால் ரூ.90 தான் வாங்க வேண்டும். ஆனால் ரூ.100 வாங்கி உள்ளார். இப்படி சந்தைக்கடை போல, குத்து மதிப்பாக வாடகை வசூலிக்கும் குத்தகை தாரர் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஒவ்வொரு வாகனத்துக்கும் தினசரி வாடகை எவ்வளவு என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் எந்த அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்படுவதில்லை.
அதே நேரத்தில் இன்னொரு டூவீலர் உரிமையாளர் நாளை வந்து வண்டியை எடுத்துக்கொள்வேன் என்றவரிடம் சரியாக ரூ.60 வசூலிக்கப்பட்டுள்ளது. 3 நாள் வண்டியை நிறுத்து கிறேன் என்று கூறியவர் மறுநாளே வந்து வண்டியை எடுத்துச் சென்றால் மீதம் உள்ள ஒரு நாளுக்கான வாடகையை திருப்பி கொடுப்பது இல்லை.
எனவே ரயில்வே வாகன ஸ்டாண்டில் வண்டிகளை நிறுத்தும்போது ஒருநாளைக்கான வாடகையை வசூலித்துவிட்டு பின்னர் வண்டியை திரும்ப வந்து எடுக்கும்போது மீதம் உள்ள வாடகையை வசூலித்தால் வாகன உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.