திருச்சியில் உள்ள தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்க இயக்குநர்களை தேர்வு செய்வதற்கான ரீஜினல் 1க்கான தேர்தல் இன்று நடக்கிறது. திருச்சி பொன்மலை, திருச்சி ஜங்ஷன் ஆகிய இடங்களில் இதற்கான வாக்குப்பதிவு நடக்கிறது. பெண்கள், மற்றும் பட்டியலினத்தவர் உள்பட மொத்தம் 19 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்காக 30க்கும் மேற்பட்டவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
திருச்சியில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடக்கிறது. தென்னக ரயில்வே கூட்டுறவு நாணய சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் வாக்களிப்பார்கள். இந்த முறை தேர்தல் போட்டி மிக கடுமையாக உள்ளது. ஒவ்வொரு தொழிற்சங்கத்தினரும் தங்கள் சங்கத்தினருக்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்தனர். அரசியல் கட்சிகளின் பொதுத்தேர்தல் போல வாக்காளர்களை கவரும் பணம்,பிரியானி, உற்சாக பானங்கள் என பல கவனிப்புகள் இங்கேயும் நடப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர்.
நாளை ரீஜினல் 2 பகுதியில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 6 ரீஜினல்கள் உள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு ரீஜினலில் தேர்தல் நடைபெறும். வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 19 இயக்குனர்கள் அடுத்த 5 வருடம் பதவி வகிப்பார்கள்.