இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தன் வசம் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர் திடீர் போர் தொடுத்தனர். இந்த அதிதீவிரப் போர் தற்போது உக்கிரமடைந்துள்ளது இதற்கிடையே இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றுள்ள பலரும் போர் சூழலில் சிக்கி உள்ளனர். திருச்சி வேளாண்மைத்துறை பேராசிரியை சிறப்பு பயிற்சி பெறுவதற்காக இஸ்ரேல் சென்றிருந்த நிலையில் அங்கு சிக்கி உள்ளார்.
திருச்சி கருமண்டபம் வசந்தம் நகரை சேர்ந்தவர் ராதிகா. இவர் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி இணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். சொட்டுநீர் பாசனம் குறித்த 2மாத பயிற்சிக்காக கடந்த செப்டம்பர் 23ம் தேதி இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் இருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள
பென்குரியன் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். மத்திய மாநில அரசு சார்பில் இவர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
10 நாட்கள் பயிற்சி சென்ற நிலையில் 7ம் தேதி போர் தொடங்கி விட்டது.இதனால் அங்குள்ள பதுங்கு குழி அமைப்பில் ராதிகா பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இவருடன் இந்திய மாணவர்கள் 5 பேரும் தங்கி உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை வரை ராதிகா குடும்பத்தாருடன் போனில் வீடியோ காலில் பேசி உள்ளார். போர் நிலைமை குறித்தும் தெரிவித்து உள்ளார். அதன் பிறகு அவர் பேசவில்லை. அதே நேரத்தில் அவர் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறார். அதில் எப்போதும் குண்டு மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து குண்டுகள் வீசப்படுவதால் ஒவ்வொரு நொடியும் பதற்றமாக இருப்பதாக அவர் கூறி உள்ளார். பேராசிரியை ராதிகா இப்போது தான் முதன் முதலாக வெளிநாடு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ராதிகாவை பத்திரமாக இந்தியாவுக்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசின் மூலம் மேற்கொண்டு வருகிறார். மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் 212 பேரை மீட்டு இன்று அதிகாலை விமானம் மூலம் டில்லி அழைத்து வந்தனர்.
இதில் ராதிகா வரவில்லை . இஸ்ரேல் தலைநகரில் சிக்கி உள்ளவர்கள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர்.இவர் இஸ்ரேல் தலைநகரில் இருந்து வெகுதூரத்தில் போர் தீவிரமாக நடக்கும் காசாவுக்கு அருகில் இருக்கிறார். அங்கிருந்து இஸ்ரேல் தலைநகருக்கு அழைத்து வந்து அதன் பின்னரே இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. ஆகவே ராதிகாவை மீட்க மேலும் சில தினங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. பாதுகாப்பாக இருக்கும் பேராசிரியை ராதிகா விரைவில் மீட்கப்படுவார் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன. ராதிகாவின் கணவர் ரமேசும் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.