திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு டிவிஎஸ் டோல்கேட் அருகே முடுக்குப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விமல்.கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது .இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் திருச்சி-புதுக்கோட்டை மெயின் ரோடு முடுக்குப்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த இரண்டு பேரை மறித்து சோதனையிட்டனர். அவர்களிடம் பெட்டி பெட்டியாக ஹான்ஸ், பான் மசாலா, விமல், எம்.கோல்ட், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது .அதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவர்களிடம் இருந்து கட்டு கட்டாக ரூ 82 ஆயிரம் பணம் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி புத்தூரைச் சேர்ந்த ஜெயராமன், கல்லுக்குழியைச் சேர்ந்த சாதிக் பாஷா என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.