திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலலகம் முன் இன்று சாலைப்பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். பெரும்பாலான பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் சங்கு ஊதி தங்கள் கோரிக்கைகளை முழக்கமிட்டனர். இந்த நூதன போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போராட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினர்.
திருச்சி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் கேசவனின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்தும், சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு போராட்டத்தை தூண்டும் கோட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தகுதி வாய்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு சாலை பராமரிப்பு பணி மேற்கொள்வதற்குரிய கருவி, தளவாடங்கள், மழைக்கோட்டு, காலணி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.
சாலை பணியாளர்களை இழிவுபடுத்தி, தாக்க முற்பட்ட சாலை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஓட்டுநர்கள் இளையராஜா ,கோபி ஆகியோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களை பத்துக்கும் மேற்பட்டவர்கள் மனரீதியாகவும், பொருளாளர் ரீதியாகவும், துன்புறுத்தி வரும் திருச்சி கிழக்கு பிரிவு சாலை ஆய்வாளர் சத்தியமூர்த்தி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களை அரசு விதிமுறைக்கு மாறாக மாற்றுப் பணிக்கு
மற்றும் உயர் அலுவலர்களின் சொந்த பணிக்கு பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.