திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சூர்யாதேவி (28). சினிமா நடிகைகள், அரசியல் பிரமுகர்கள், டிக்டாக் பிரபலங்களை திட்டி அதனை சோசியல் மீடியாக்களில் வீடியோவாக வெளியிட்டு அதன் மூலம் விளம்பரம் தேடிக்கொள்வது இவரது வழக்கம்.
இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (21 ம்தேதி) மணப்பாறை காவல் நிலையத்தில் தனது கணவன் மருதுபாண்டி, தனது சகோதரர் தேவா ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். அதேபோல் சூர்யாதேவி மீது தேவாவின் மனைவி கீர்த்திகா என்பவரும் புகார் அளித்திருந்தார். நேற்று இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சூர்யாதேவி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது புகாரில் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மதுபோதையில் காவல்நிலையத்திற்கு வந்த சூர்யாதேவி அங்கிருந்த போலீசாரை தகாதவார்த்தைகளால் திட்டியதோடு மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து காவல்நிலையம் முன்பு உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயல்வது போல் நாடகமாடினார். அப்போது அங்கிருந்த போலீசார் பெட்ரோல் கேனை பிடுங்கியதுடன் அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதுகுறித்து தலைமைக்காவலர் லாரன்ஸ் அளித்த புகாரில் அரசுப்பணிசெய்யவிடாமல் தடுத்து தகாதவார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக சூர்யாதேவி மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் சூர்யாதேவி மணப்பாறை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அடுத்த மாதம் 6ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.