Skip to content
Home » பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

பெண் வக்கீல் வாகனத்தை உடைத்து எடுத்து சென்ற போலீஸ் எஸ்.ஐ….

  • by Authour

திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி அருகே பாலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது..
இந்தக் காவல் நிலையத்திற்கு எதிரே வழக்கறிஞர் அலுவலகம், மளிகை கடை, இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மையம், அரிசி கடை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்டவை அமைந்துள்ளது. சுமார் 15 அடி அகலம் கொண்டது இந்த சாலை.
காவல் நிலையம் மற்றும் கடை, அலுவலகங்களு க்கு வரும் இருசக்கர வாகனங்கள் காவல் நிலையத்தின் சுற்று சுவர் பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த வகையில் காவல் நிலைய சுற்றுச்சுவர் பகுதியில் தினமும் அதிக எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனங்களும், பக்கவாட்டு சாலையில் கார்களும் நிறுத்தப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன் அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரை சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் எடுத்துச் சென்று காவல் நிலையத்திற்குள் நிறுத்தியுள்ளார்.
இந்த விபரம் அந்த ஸ்கூட்டர் உரிமையாளருக்கு தெரிய வந்ததை தொடர்ந்து அவர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது நீண்ட நாட்களாக கேட்பாரற்று இருந்ததால் காவல் நிலையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தினோம். என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வாகனத்தின் ஆர்.சி புக் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, கடிதம் எழுதிக் கொடுத்து வாகனத்தை மீட்டு சென்றார் வழக்கறிஞர் . அந்த ஸ்கூட்டரை ஒரு பெண் வழக்கறிஞர் பயன்படுத்தி வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை மீட்டு வெளியே கொண்டு வந்த போது ஸ்கூட்டரை தள்ள கூட முடியாத நிலையில் இருந்தது.

இதனால் என்ன நடந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி தரக்கூடிய காட்சி பதிவாகி இருந்தது.
அதாவது நிறுத்தப்பட்டிருந்த அந்த ஸ்கூட்டரை திருடர்கள் பூட்டை உடைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் திருடி செல்வது போல் சப் இன்ஸ்பெக்டர் அந்த ஸ்கூட்டரின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது.
அந்த பகுதியில் ஏராளமான இருசக்கர வாகனங்கள் நிறுத்தி இருந்தபோது இந்த ஒரு குறிப்பிட்ட ஸ்கூட்டரை மட்டும் சப் இன்ஸ்பெக்டர் ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பூட்டை பலவந்தமாக திருடர்கள் உடைப்பதை போல் உடைத்து காவல் நிலையத்திற்குள் எடுத்துச் சென்றார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் இவரது இந்த செயல் திருடர்களுக்கு வழி காட்டுவது போலவும், அவர்களை ஊக்குவிப்பது போலவும் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அந்த பெண் வழக்கறிஞர் பல சமூக நல வழக்குகளை நடத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் அவரை திட்டமிட்டு ஏதேனும் வழக்குகளில் சிக்க வைப்பதற்காக சப் இன்ஸ்பெக்டர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த ஸ்கூட்டரின் முன் பகுதியிலும் பின்பகுதியிலும் வழக்கறிஞர் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்கூட்டரை காவல் நிலையத்தில் இருந்து எடுத்த போது அந்த ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அத்துமீறி, விதிகளுக்கு புறம்பாக பூட்டி இருந்த ஒரு இருசக்கர வாகனத்தை உடைத்து அதை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்குள் கொண்டு சென்ற சப் இன்ஸ்பெக்டர் மீது திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண் வழக்கறிஞர் பார் கவுன்சில் மற்றும் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் நேரில் புகார் அளிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் அது உள்ள நிலையிலேயே அதை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதாவது ரெக்கவரி வாகனங்கள் மூலமோ அல்லது சரக்கு வாகனத்தில் ஏற்றியோ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அதேபோல் வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு ஆன்லைன் மூலம் அதன் உரிமையாளர் யார், அவரது தொலைபேசி எண் என்ன என்பதையும் தற்போதைய நவீன காலத்தில் அறிய முடியும். அதுபோல் அதன் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் சப் இன்ஸ்பெக்டர் விசாரித்திருக்கலாம்.
ஆனால் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஒரு சப் இன்ஸ்பெக்டரே வழக்கறிஞர் அலுவலகம் எதிரே, வழக்கறிஞர் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டி பூட்டப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை உடைத்த சிசிடிவி காட்சி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *