திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காணக்கிளியநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியசாமி(56) இவர்2020 முதல் 2022 வரை நாகை போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
அப்போது நாகை கீச்சாங்குப்பம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சிலம்பு செல்வன். ஆனால் இன்ஸ்பெக்டர் பெரியசாமி, இந்த வழக்கை பதிவு செய்யும்போது, சிலம்பு செல்வனை 5வது குற்றவாளியாக சேர்த்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட 5 பேரையும் குண்டாசில் அடைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ கஞ்சாவை நுண்ணறிவு பிரிவுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் கஞ்சா கடத்தல் கும்பலுடன் சேர்ந்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஒரு தனியார் விடுதியில் உணவு அருந்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியசாமியை டிஸ்மிஸ் செய்து, திருச்சி டிஐஜி வருண்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் பெரியசாமி 1997ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தவா். இவர் பணியில் சேர்ந்தது முதல் இதுவரை 13 முறை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் தண்டிக்கப்பட்டவர். இறுதியாக இப்போது டிஸ்மிஸ் ஆகி உள்ளார்.