திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அப்புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது மூன்று ஆதரவாளர்கள் 11.7.2022 ம் தேதி அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்படி தீர்மானத்தின் பேரில் ஓ.பன்னீர்செல்வம் 28.3.2023ம் ஆண்டு இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல் செய்த மனுவானது உயர்நீதிமன்ற நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேற்படி தனி நீதிபதி உத்தரவின் பேரில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டு, O.S.A NO: 68,69,70 2023. என்ற மேல் முறையீட்டு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருக்கிறது. தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வம் நேர்மையற்ற முறையிலும், ஏமாற்றும் நோக்கிலும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் போலவும் தனது சமூக வலைதளமான முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளில் அ.இ.அ.தி.மு.க. வின் ஒருங்கிணைப்பாளர் என்பது போல் பதிவேற்றம் செய்தும், அ.இ.அ.தி.மு. க சின்னம் மற்றும் கடித குறிப்பேடுகளை ( Letter Head) பயன்படுத்தி ஏமாற்றி வருகிறார்.
இந்நிலையில் 24.04.2023 ம் தேதி(இன்று) திருச்சி ஜீ – கார்னர் பொன்மலை மைதானத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு எங்களது கட்சியின் சின்னம் மற்றும் கொடியையும் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், அதற்கு தகுந்த சட்டப்பிரிவுகளின் படி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இவ்வாறு மனுவில் கூறி உள்ளார். இந்த மனுவை கமிஷனர் சத்தியபிரியா மாநாடு நடைபெறும் பொன்மலை ஜி கார்னர் பகுதி அடங்கிய பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தார். அதன் பேரில் பொன்மலை போலீசார் ஓபன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.