திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதன் எதிரே காவிரி படித்துறை உள்ளது. அங்கு நேற்று பிற்பகலில் குளித்துக்கொண்டிருந்த சிலர், படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர் போன்ற பொருள் ஒன்று கிடப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் தீயாக பரவியது. இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராக்கெட் லாஞ்சரை பாதுகாப்பாக மீட்டு மாவட்ட ஆயுதப்படையில் பாதுகாப்பாக வைத்தனர். வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்விற்கு பின்னரே அதன் தன்மை குறித்து உண்மை நிலை தெரியவரும் என ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் இது உண்மையான ராக்கெட் லாஞ்சரா ? வெடிக்கும் தன்மையுள்ளதா ? என்பது ஆய்வுக்கு பின்னரே உறுதி செய்ய முடியும் என்றும் இதனை முதலில் பார்த்தவர்களிடம் தொடர்ந்து விசாரணைமேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ராக்கெட் லாஞ்சர் கிடந்த பகுதி அருகில் பழமை வாய்ந்த சிவன் கோயில் பகுதி என்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.