தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோரின் உத்திரவின்படி தமிழ்நாடு போலீசில் பேரிடர் மீட்புப்படை அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி மைதானத்தில் இந்த பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். கூடுதல் டிஜிபி எச். எம். ஜெயராம் தலைமையில் அமைந்துள்ள இந்த பேரிடர் மீட்பு படையில் 120 வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.
மழை, விபத்து, தீ விபத்து, உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது உடனடியாக அந்தந்த இடங்களுக்கு சென்று இடர்பாடுகளில் சிக்கியவர்களை உடனடியாக மீட்பது, சொத்துக்களை மீட்பது , மரங்கள் சாய்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் எப்படி போக்குவரத்தை சரிசெய்வது என்பது குறித்து 120 பேருக்கும் இன்று பயிற்சி அளிக்கப்பட்டது.
பேரிடர் மீட்புக்கு பயன்படுத்தும் உபகரணங்களை எப்படி கையாள்வது என்பது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்ட் ஆனந்தன், மற்றும் கமாண்டோக்கள் இதில் பங்கேற்றனர். மத்திய மண்டலம், தெற்கு மண்டலம் ஆகிய இடங்களில் ஏற்படும் பேரிடர் மீட்பு பணிக்கு இப்படை ஏந்நேரமும் தயார் நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.