திருச்சி திருவெறும்பூர் அருகே பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு – டி.எஸ்.பி சம்பவ இடத்தில் விசாரணை
திருச்சி கீழக்கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (46). இவர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி திருச்சி தெற்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் இருக்கிறது
இவரது மனைவி மாலதி கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருவெறும்பூர் தொகுதியில்
போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் குடும்பத்தோடு ரவிச்சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை சுமார் 3 மணி அளவில் மர்ம நபர்கள் இவரது வீட்டின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதில் இரண்டு குண்டு வெடித்து சிதறியது. ஒரு குண்டு வெடிக்காமல் கிடந்துள்ளது.
பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி திரியிட்டு கொளுத்தி வீசியுள்ளனர். இச்சம்பவம் காரணமாக வீட்டின் முன்பு சேதம் ஏற்பட்டது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை செய்தனர்.
இதற்கு இடையில் தடைய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களை ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் மோப்பநாய் ராக்சி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சித் தலைவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.