திருச்சி மக்களவை தொகுதியில் அடைக்கலராஜ் எம்.பி. காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை வெற்றிபெற்றார். 1998ல் நடைபெற்ற தேர்தலில் அடைக்கலராஜ் வெற்றி வாய்ப்பை இழந்தார். பாஜக சார்பில் சேலத்தில் இருந்து வந்த ரங்கராஜன் குமாரமங்கலம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுகவில் புதிதாக சேர்ந்த தலித் எழில்மலை, மதிமுக சார்பில் எல். கணேசன், அதிமுகவை சேர்ந்த கந்தர்வகோட்டை குமார் 2 முறை, அறந்தாங்கி திருநாவுக்கரசு என இன்றைய தேதி வரை அனைவரும் வெளியூர்க்காரர்கள் தான் இங்கு வெற்றி பெற்று உள்ளனர்.
இதில் தற்போதைய அதிமுக மாவட்ட செயலாளரான குமார் திருச்சி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் தான். தற்போதும் திருச்சி மக்களவை தொகுதியை பெற திமுக கூட்டணியில் வெளியூர்க்காரர்கள் பலர் முயன்று வருகிறார்கள்.
அதே நேரத்தில் திருச்சி காங்கிரசார் மத்தியில் உள்ளூர்காரர்களுக்கே திருச்சி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக திருச்சி காங்கிரஸ் பிரமுகர் சார்லஸ் திருச்சி மாநகரின் பல பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளார். அதில் காங்கிரஸ் தலைமையே திருச்சி தொகுதியை மண்ணின் மைந்தன் ஜோசப் லூயிசுக்கு(அடைக்கலராஜ் மகன்) கொடு என்று கூறப்பட்டு உள்ளது.
ஜோசப் லூயிசும் சீட் பெறுவதற்காக டில்லியில் முகாமிட்டு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து வருகிறார்.