திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் உள்ளஸ்ரீரங்கம் திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டி வீட்டிற்கு திரண்டு வந்தனர்.
300 பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீசார் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்கள் திருச்சி வயலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தோகைமலை யில் இருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம் வரும் பஸ்கள், திருச்சி – வயலூர் செல்லும் பஸ்கள் என 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மறியலில் சிக்கிக்கொண்டன. இந்த பஸ்களில் தான் திருச்சிக்கு வேலைக்கு வருவோர், கல்வி நிலையங்களுக்கு வருவோர் வழக்கமாக வருவார்கள். அவர்களும் மறியலில் சிக்கி கொண்டு அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்கள் ஊராட்சி மாநகராட்சியோடு இணைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது வேனில் இருந்து சிலர் கீழே இறங்கியதால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், காலையிலேயே 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த சாலை மறியலால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மேலும் வயலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.
குறிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க இன்னும் 165 நாட்கள் அவகாசம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் சில ஊராட்சிகளை மாநகராட்சி யோடு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் தற்போது இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சியோடு தங்கள் ஊராட்சியை இணைக்கக் கூடாது இணைத்தால் வரி அதிகமாகும் 100 நாள் வேலை பறிபோகும் தங்கள் கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம். வரி உயர்ந்தால் எப்படி விவசாயம் செய்வது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருவரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.