திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலச்சந்தரின் மனைவி வீட்டை பூட்டி விட்டு ஓசூரில் ஒரு வீடு புதுமனை புகுவிழாவிற்கு தனது இரு மகன்களுடன் சென்றுவிட்டார்.
அவர் நேற்று வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் இருந்த எட்டரை சவரன் தங்க நகை மற்றும் ஒன்றரை கிலோ மதிப்புள்ள இரண்டு வெள்ளி பாத்திரங்கள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கம்ப்யூட்டருக்கு பயன்படுத்த கூடிய மோடம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து பாலச்சந்தரின் மனைவி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.