திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஒடிசாவிலிருந்து இருவர் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச் சாவடியில், செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை பேருந்துகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு பேருந்தில் 2 தோள் பைகள் (ஷோல்டர் பேக்) மற்றும் ஒரு பெட்டியில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவற்றை கொண்டு வந்த திருச்சி ராம்ஜிநகர் அருகே உள்ள மலைப்பட்டி மு. சக்திவேல், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சு. அப்துல் பாசித் ஆகிய இருவரையும் போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதில் கைதான இருவருமே கஞ்சா மொத்த வியாபாரிகள் எனவும், யார் யாருக்கெல்லாம் இவற்றை விநியோகிக்க திட்டமிட்டிருந்தனர் எனவும், இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
