திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாகாளி குடி அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயில். பழமையும் பெருமையும் வாய்ந்தது. நீதியும், மதியூகமும் கொண்டு உஜ்ஜயினியை தலைநகராக கொண்டு அரசாட்சி செய்த சரித்திரப் புகழ் பெற்ற விக்கிராமதித்த மன்னனால் காடாறு மாதத்தில் போற்றி வணங்கப்பட்ட காளியம்மன் உற்சவர் விக்ரகம் இங்கு உள்ளது. இத்திருக்கோயிலில் கருவறையில் ஸ்ரீ ஆனந்த செளபாக்கிய சுந்தரி யாகவும், அழகும், கருணையும் ஒருங்கே நிறைந்த ஸ்ரீ அழகம்மை (செளந்தர்ய வள்ளி ) எனும் உற்சவர் அம்மனாகவும், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாக எட்டு திருக்கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மஹிஷாஸிரமர்த்தியாகவும் செளபாக்கிய
ரூபிணியாகவும் அன்னை மாகாளி கொலுவீற்றிருக்கிறாள். இத்திருக்கோயில் செப்பனிடப்பட்டு திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஜன 27ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே முதற் கால யாக பூஜையுடன் இன்று தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை , அங்குரார்ப்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், மூலவர் கலா கருஷணம், கடஸ்தாபனம் பூஜையோடு முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திரவ்யாஹுதியும், பூர்ணா ஹீதியும் , தீபாரதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.