Skip to content
Home » திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

திருச்சி NIT-யில் 19 வது பட்டமளிப்பு விழா…

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (தே.தொ.க. திருச்சி, NIT-T) 19வது பட்டமளிப்பு விழா 28 ஜூலை, 2023 (வெள்ளிக்கிழமை) அன்று வளாகத்தின் பார்ன் அரங்கத்தில் நடைபெற்றது. இப்பயிலகத்தின் நிர்வாக குழுத் தலைவர் (Chairperson, Board of Governor) திரு பாஸ்கர் பட் அவர்கள் தொடங்கி வைத்த மாபெரும் விழாவில் 2155 மாணவர்கள் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழா முற்பகல், பிற்பகல் என்று இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. முற்பகல் அமர்வில் பதக்கம் வென்ற மாணவர்களுக்குப் பதக்கங்களும், இளங்கலை மாணவர்களுக்குப் பட்டங்களும் வழங்கப்பட்டன. பிற்பகல் அமர்வில் முதுகலை மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் பயிலக இயக்குனர் முனைவர் திருமதி ஜி.அகிலா அவர்கள் தமது உரையில் தேசிய தொழில்நுட்பக் கழகம் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் புரிந்த சாதனைகளைப் பட்டியலிட்டார். இவை இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் இடையறா உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனே ஆகும். மேலும் அவரது உரையில், தேசிய கல்விக் கொள்கை 2020 இன் செயல்படுத்தல், உலகளாவிய மேன்மையை அடைய பயிலகத்தின் எதிர்கால திட்டம், சமுதாயத்தில் குறிப்பிடத் தகுந்த தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வழிவகைகள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டன. அவர் பயிலகத்தின் வளர்ச்சி தரவுகள் குறித்தும், தேசிய தரவரிசை பட்டியலில், தே.தொ. கழகங்களிடையே முதன்மையிடம் பெற்றமையைக் குறித்தும் பெருமை கொண்டார்.

நிர்வாகக் குழுத் தலைவர் திரு. பாஸ்கர் பட் அவர்கள் பட்டம் பெற்ற மாணவர்களைப் பாராட்டிப் பேசினார். அவர் NIT-T உலகத் தரத்திற்கு ஈடான உள்கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்டு, சமூகத்திற்கு மகத்தான சேவை புரிகிறது என்று பெருமிதம் கொண்டார். மேலும், தனது உரையில் அவர் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறு சிறப்பு அம்சங்களைப் பற்றியும், பயிலகக் கல்வித் திட்டத்தில் அவற்றின் செயல்பாட்டைப் பற்றியும் கூறினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு சௌமித்ர பட்டாச்சாரியா அவர்கள் பாஷ் (Bosch) பன்னாட்டுக் குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், மண்டல தலைவரும் ஆவார். அவர் தனது உரையில், மாணவர்கள் உயர்கல்வியின் வாயிலாக

தலைமைத்துவ பண்பை வளர்த்துக் கொள்ளும் அதே வேளையில், தமது மனதில் சமூக நல்லிணக்கப் பண்புகளைப் பேணிக் காக்குமாறு வேண்டினார். நாடுகளுக்கிடையேயான வேற்றுமைகளால் பிளவுபட்டு, பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருக்கும் இவ்வுலகச் சமூகம், இளம் மாணவர்களை நம்பிக்கை நட்சத்திரங்களாக காண்கிறது. அவர்கள் சகவாழ்வு மனப்பான்மையை மனதில் கொண்டு, உலகளாவிய சம வளர்ச்சிக்கேற்ற சூழலைப் பேணுவர் என்றும் நம்புகிறது. அத்தகைய வளர்ச்சிப் பாதையில், தடைகளைத் தகர்த்து மேன்மையை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல இளம் தொழில் வல்லுனர்கள் கடமையாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

புதிய விஷயங்களைக் கற்பதற்கும், காலத்தே வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இளம் வல்லுனர்கள் உற்சாகத்துடன் செயல்புரிய வேண்டும். மகத்தான இப்பணியில், அவர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக் கொண்டு, புதிய நல்லெண்ணத்தை ஆரத் தழுவும் ஒரு கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, தீயன நீக்கி, வேண்டுவனவற்றை ஏற்று அவர்கள் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் நம்முடைய பாகுபாடுகளைத் தகர்த்து, கூட்டுமுயற்சியைக் கைக்கொண்டு, எல்லோரும் விளைவு சார்ந்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டினார். அத்தகைய முயற்சியில் நற்பலன் சார்ந்த பின்னூட்டக் கருத்துக்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, முழுமையான தர முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் திரு பட்டாச்சாரியா அவர்கள் தொழில் நிர்வாகத்தில் நெறிமுறைகள், நம்பகம், சமூகப் புரிந்துணர்வு ஆகியவற்றின் அவசியத்தைப் பற்றியும் மாணவர்களுக்குத் தன் உரையில் குறிப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவின் ஏனைய சம்பிரதாயங்கள் நிகழ்த்தப்பட்டன. பல்வேறு துறைகளின் தலைமைப் பேராசிரியர்கள் தம் துறை சார்ந்த மாணவர்களை அறிமுகப்படுத்த, அவர்களுக்குப் பட்டங்களைப் பயிலக இயக்குனர் வழங்கினார்.

முற்பகல் நடைபெற்ற விழாவில், ஒவ்வொரு துறையின் முதன்மை மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர் பதக்கம் அணிவித்தார். பயிலக பதக்கங்கள் 10 இளங்கலை மாணவர்களுக்கும் 30 முதுகலை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன. முதன்மை மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கத்தை மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறையின் J. சௌந்தர்யா என்ற மாணவி பெற்றார்.

அதன் பின், பயிலக இயக்குனர் 44 இளங்கலைக் கட்டிடக்கலை மாணவர்களுக்கும், 1090 இளங்கலை தொழில்நுட்ப மானவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார். ஜனாதிபதியின் பதக்கம் வென்ற மாணவி உறுதிமொழியைப் படிக்க, பட்டங்களும் பதக்கங்களும் பெற்ற எல்லா மாணவ மாணவியரும் உறுதிமொழி ஏற்றனர்.

பயிலகத்தின் கல்விப் பிரிவு டீனும், பதிவாளரும் வழங்கிய பட்டங்களின் பதிவை நிர்வாகக்குழுத் தலைவர் கையொப்பமிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் பட்டமளிப்பு விழாவின் முற்பகல் அமர்வு நிறைவு பெற்றதாக அறிவித்தார்.

பட்டமளிப்பு விழாவின் பிற்பகல் அமர்வில், 879 மாணவர்களுக்கு முதுகலைப் பட்டங்களும், 142 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்களும் வழங்கப்பட்டன. முதுகலை மாணவர்களில் 538 பேர் தொழில்நுட்பத்திலும், 22 பேர் கட்டிடக்கலையிலும், 89 பேர் அறிவியலிலும், 108 பேர் கணிப்பொறி பயன்பாடுகளிலும், 19 பேர் கலையிலும், 92 பேர் வணிக மேலாண்மையிலும், 19 பேர் அறிவியல் ஆய்விலும் பட்டம் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *