நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை சார்பில் மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம் வரும் டிசம்பருக்குள் நிறைவடைந்து விடும். இன்னும் கழிவறை, குடிநீர் வசதி, போன்றவைகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது. இதற்கிடையே மழை காலமும் வருவதால் சற்று தாமதம் ஆகிறது. ஆனால் பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது.
மழை காலத்தில் சென்னையில் மழை நீர் தோங்காதவாறு அனைத்து வடிகால் வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது. இதற்காக 22 கோடி ரூபாய் செலவில் 2 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் 25 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் மழை நீர் தேங்காது. திருச்சியிலும் அதுபோல மழை நீர் வடிகால் வாய்க்கால்களை துரிதமாக சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஆணையாளர் ஈடுபட்டுள்ளார்.
திருச்சி மாநகராட்சியுடன் விருப்பம் இல்லாத பகுதிகளை சேர்க்கவில்லை. விரும்புகிறவர்கள் சேரலாம். 2 ஊர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சேர்க்கவில்லை. மண்ணச்சநல்லூர், சமயபுரம், லால்குடி பேரூராட்சி பகுதிகள் விரும்பியதால் சேர்க்கப்படுகிறது.
வரும் உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து தான் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் இலக்கின்படி 200 இடங்களில் வெற்றி பெறுவோம். திருச்சியில் 100 சதவீத வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அருண் நேரு எம்.பி., மேயர் அன்பழகன், எம்.எல்.ஏக்கள்சவுந்திரபாண்டியன், பழனியாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.