திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் ஸ்ரீ கைலாய முடையார்,திருநெடுங்களம் நெடுங்களநாதர் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்புமிக்க பிரதோஷ தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். திருவெறும்பூர் அருகே சோழமாதேவியில் ஆயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க கைலாயமுடையார் சிவன் ஆலயத்தில் பிரதோஷ சிறப்பு பூஜையானது நேற்று நடைபெற்றது. முதலில் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பூஜையின் போது நந்தியபெருமானுக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா், விபூதி, திரவிய பொடி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கைலாயமுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மலா் அலங்காரத்தில் காட்சிஅளித்த கைலாயமுடையார் சமேத கற்பகாம்பிகைக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நந்தியம் பெருமானையும்கற்பகாம்பிகை உடனுரை கைலாயமுடையார் ஆகியோரை வழிபட்டுச் சென்றனர். பிரதோஷ பூஜைகளை அர்ச்சகர்கள் தட்சிணாமூர்த்தி, ஆளப்பன் ஆகியோர் செய்து இருந்தனர். பிரதோஷத்தை முன்னிட்டு எறும்பீஸ்வரர், சோளீஸ்வரர், போலீஸ் காலனி ரத்தினகிரீஸ்வரர்,துப்பாக்கி தொழிற்சாலை அருகே பட்டவெளி கிராமத்தில் உள்ள பொன்னீஸ்வரர் ஆகிய கோவில்களிலும் பிரதோஷம் நடைபெற்றது.திருநெடுங்களம் திருநெடுங்களநாதர் கோயிலில் நடந்த பிரதோஷ விழாவிற்கு சிறப்பு பூஜைகளை கோயில் செயல் அலுவலர் வித்யா முன்னிலையில் கோவில் அர்ச்சகர்கள் சோமசுந்தர சிவாச்சாரியார் ரவி சிவாச்சாரியார் ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் செய்து இருந்தனர்.