திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த வேங்கூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளி இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் பள்ளியில் உள்ள விடுதியில் கட்டாயமாக தங்கி படிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது.
குண்டூர் பர்மா காலனியை சேர்ந்த மாணவி பள்ளி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு வணிகவியல் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியை சக மாணவிகளுக்கு முன்பு ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தான் வைத்திருந்த 7 பாராசிட்டமால் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிந்ததும் வெளியில் தெரியாமல் மாணவியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்துவிட்டனர். மாணவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பி விட்டார். அதே நேரத்தில் மாணவியை சந்தித்து இது பற்றி கேட்டால், மாணவியும், பெற்றோரும் பதில் அளிக்க மறுத்து விட்டனர். இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் மீண்டும் பள்ளியில் சேர்க்க மாட்டோம், தேர்வு எழுத முடியாமல் போய்விடும் என பள்ளி நிர்வாகம் மிரட்டி இருப்பதால் தான் மாணவி இதுபற்றி வெளியில் சொல்ல பயப்படுகிறார் என அந்த பகுதி மக்கள் கூறினர்.