திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே உள்ள வாளசிராமணி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48) . உடல்நலக் குறைவு காரணமாக இறந்து போனார். இவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக இவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அதற்கான வேலைகளை துவங்கியுள்ளனர்.அப்போது அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவர் சடலத்தை எடுத்துச் செல்லும் பாதை தனக்கு சொந்தமானது என்றும் இது தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. எனவே இறந்தவரின் சடலத்தை தோளில் சுமந்து செல்வதற்கு அனுமதிப்பதாகவும், வண்டியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.’
இது குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் மண்டல துணை வட்டாட்சியர் தனபாக்கியம் வருவாய் ஆய்வாளர் கீதாஞ்சலி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சஞ்சீவி, தா.பேட்டை ஒன்றிய ஆணையர் ( கிராம ஊராட்சி) குணசேகரன்,ஒன்றிய குழு தலைவர் ஷர்மிளா பிரபாகரன்,துணைத் தலைவர் மல்லிகா பெரியசாமி ஒன்றிய செயலாளர் கே கே ஆர் சேகரன் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பிரச்சனைக்குரிய இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இரு தரப்பையும் சமரசம் செய்த அதிகாரிகள் வண்டி பாதையில் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு தற்போது எதிர்ப்பு தெரிவிக்க கூடாது எனவும் நீதிமன்றத்தில் உரிய ஆணை பெற்றவுடன் பாதை தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கண்டு கொள்ளலாம் தற்போது சடலம் எடுத்துச் சொல்ல யாரும் தடை செய்யக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து பொக்லின் இயந்திரம் கொண்டு பாதை சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் விஜயகுமாரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பாதை பிரச்சனை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.