திருச்சி மாவட்டம், மணப்பாறை ஜீவாத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கமலவேணி. 65 வயது மூதாட்டியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு பணம் கடனாக கொடுத்துள்ளார். அந்த பணத்திற்கான வட்டியை கடந்த மாதம் 16 ம் தேதி வாங்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மூதாட்டியின் மகள் மலர்விழி மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் கடைசியாக கமலவேணி அதே பகுதியில் உள்ள சரஸ்வதியின் வீட்டிற்கு சென்றதால் சரஸ்வதியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கமலவேணியை கொலை செய்தது சரஸ்வதி தான் என தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிணற்றில் வீசப்பட்ட கமலவேணியின் உடலை போலீசார் மீட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
சரஸ்வதி குடும்பத்தினருக்கும் – கமலவேணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கமலவேணியை தாக்கியதால் அவர் வீட்டில் மயங்கி விழுந்து இறந்து விடவே அவரின் உடலை சரஸ்வதி மகள் வர்ஷினி (23), மகன் ஹர்சன் (19) அன்று நள்ளிரவே இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வாகைக்குளம் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் போட்டு விட்டு வந்து வழக்கமாக வேலையை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீசார் நேற்று தாய், மகள், மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.