திருச்சி மாவட்டம் தொட்டியம் ஐயப்பன் நகரை சேர்ந்த கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65) இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மணிகண்டன் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டியில் மெடிக்கல் கடை நடத்தி வருவதுடன் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். மகள் பிரியா திருமணம் முடிந்த நிலையில் திண்டுக்கல்லில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரி தொட்டியம் ஐயப்பன் நகரில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 17.5.2023 அன்று அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தொட்டியம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு சென்று போலீஸார் பார்த்தபோது ராஜேஸ்வரி கை, கால்கள், வாய் ஆகியவை துண்டால் கட்டப்பட்ட நிலையில் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தவரை மீட்டு ராஜேஸ்வரியின் மகன் மணிகண்டன் தொட்டியம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் எஸ். திருச்சி காவல் துணை கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் முசிறி டி.எஸ்.பி யாஸ்மின், மேற்பார்வையில் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வீரமணி, முதல் நிலை காவலர் விஜயராகவன், தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் ஆகியோர் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது, தொட்டியம் வள்ளுவர் தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் கிருஷ்ணன் என்கின்ற பில்லா (20), மணமேடு நடு தெருவை சேர்ந்த
விஸ்வநாதன் மகன் ஆறுமுகம் என்கின்ற நாட்டாமை (20), தொட்டியம் அழகரை மேற்கு அர்ஜுன தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன்ராஜ்(19), தொட்டியம் சித்தூர் தெற்கு தெரு ராஜாராமன் மகன் விக்ரமன் (20) ஆகியோர் மூதாட்டியை கட்டிப்போட்டு கொலை செய்து கொள்ளையடித்தது தெரியவந்ததும் கொள்ளையடித்து சென்ற நகைகளை திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் விற்பனை செய்ய முயற்சித்தபோது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நால்வரையும் போலீசார் பிடித்து தொட்டியம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் மூதாட்டியை கொலை செய்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டனர்.கிருஷ்ணன், ஆறுமுகம் மோகன்ராஜ் ஆகிய மூவரும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் என தெரிய வந்தது,விக்ரமன் தனியார் வங்கி ஒன்றில் கலெக்சன் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
மேலும் விசாரணையில் இறந்து போன ராஜேஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்ட கிருஷ்ணன் என்பவரின் அண்ணன் விஜயகுமார் மற்றும் அம்மா ஆனந்தி ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு திட்டியதாகவும், அதை மனதில் வைத்துக்கொண்டு கிருஷ்ணன் தனது நண்பர்களை கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டு ராஜேஸ்வரியை கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணத்தினை திருடுவதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து போலீஸார் நால்வரிடமிருந்து சுமார் 38 சவரன் நகைகள், 80 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு ஐபோன், ரூ.48,000 ரொக்கம் மற்றும் திருடிய பணத்தை கொண்டு வாங்கிய சுமார் 4.5 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.