திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சென்று பார்த்த போது அமோனியம் குளோரைடு நிரப்பப்பட்டிருந்த 1.5 டன் கொள்ளவு கொண்ட பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. மேலும் பாய்லர் (கொதிகலன்) வெடித்ததில் அந்த கட்டிடம் சேதமானதுடன் அருகில் இருந்த மின்மாற்றி மற்றும் மின் கம்பங்களில் இருந்த மின் கம்பிகளும் அறுந்து விழுந்தது. மேலும் மேற்கூரை மற்றும் பாய்லரின் பாகங்கள் நூறு மீட்டர் தூரம்வரை சிதறிக் கிடந்தன. இதுமட்டுமின்றி அமோனியம் குளோரைடு வெளியாக ஆரம்பித்தது. இதனால் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும்
சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதிக வெப்பத்தில் பாய்லர் வெடித்ததா? அல்லது மின்கசிவால் ஏற்பட்ட விபத்தா என்பது குறித்தும் தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது. காலை 7 மணிக்கு பின்னரே பணியாளர்கள் பணிக்கு வருவார்கள் என்பதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இருப்பினும் சுமார் 1.25 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விபத்தால் அப்பகுதியில் உள்ள 5 கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.